வாழ்த்துரை
“ரியல் எஸ்டேட் அகராதி” கி.பி: 1500 இல் இருந்து 1950 வரை தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட ஜூடிசியல் மற்றும் ரெவன்யூ வார்த்தைகளின் “அர்த்தங்களும் விளக்கங்களும்” என்ற தலைப்பிலான இந்த நூல் “நிலம் உங்கள் எதிர்காலம்” என்ற புத்தக வரிசையில் 3 வதாக வெளிவருகிறது என்பதை அறிந்து உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏனென்றால் இந்த நூலை தொகுத்து வெளியிடுபவர் என்னை போன்றே ரியல் எஸ்டேட் ஆலோசகர் மற்றும் தொழில் முனைவர், எனது அன்பு தம்பி திரு. சா.மு.பரஞ்சோதி பாண்டியன் ஆவார் ஆகவே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இவர் எமது தலைமையில் இயங்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் (FAIRA) வாழ்நாள் உறுப்பினராகவும். ( LIFE MEMBER) தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் களப்பணி செய்துகொண்டு, பல வெற்றிகரமான முதலீட்டாளர்களுக்கு ஆலோசகராகவும், பின்புலமாகவும் இருக்கிறார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
பொதுவாக இவர் பொதுமக்களுக்கு நிலங்கள் சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், தொடர்ந்து சமூக ஊடகங்களில் எழுதிக்கொண்டும், பேசி கொண்டும் இருக்கிறார்.
மேலும் இவர் “நிலம் உங்கள் எதிர்காலம்” பாகம் 1 & பாகம் 2 என்ற இரு நூல்களை ஆதாரப்பூர்வமாக ஆழ்ந்த நுணுக்கங்களோடு எழுதி நிலம் சம்பந்தமான பல சந்தேகங்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் மிக சிறப்பாக எழுதி வெளியிட்டுருக்கிறார்.
வாசிப்பு, எழுத்து, அனுபவம் என்று ரியல் எஸ்டேட் துறை சம்மந்தமான புத்தகங்களோடு இயங்கி கொண்டு இருக்கும் திரு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் பல்வேறு புத்தகங்களையும், நீதிமன்ற தீர்ப்புகளையும் நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு நேரில் சென்று அலசி ஆராய்ந்து, ஆதாரங்களை தேடி வாசித்து இந்த புத்தகத்தை நமக்காக, நாளைய தலைமுறைக்காக மிகச் சிறப்பாக தொகுத்து இருக்கிறார்.
குறிப்பாக பார்சி, அரபி, இந்தி, சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, பிரெஞ்சு, டச்சு, சிங்களம், பிற மொழிச் சொற்கள், பழைய தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பயன்படுத்தப்பட்ட ஜூடிசியல் மற்றும் ரெவன்யூ வார்த்தைகளை மிக நேர்த்தியாக எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் இந்த புத்தகத்தில் தொகுத்து இருக்கிறார்.
இந்த புத்தகத்தில் இருக்கும் பல சொற்கள், பழைய கிரய பத்திரங்களிலும், வருவாய்துறை ஆவணகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
உதாரணமாக “ஜாரி” மனைகள் என்று தேனி பகுதிகளில் வருவாய் ஆவணங்களில் பயன்படுத்தபடுகிறது “ஜாரி” என்றால் “மறுசீரமைப்பு” (Restoration) என்றும், அதே போல் பழைய கிரய பத்திரங்களில் “ஜாபிதா” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது, அதற்கு “பட்டியல்” (list) என்று அர்த்தம். மேல் சொன்ன இரு சொற்களும் பார்சி மொழி என்று இதில் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் நவாப் ஆட்சியில் இருந்த காலத்தில், பார்சி ஆட்சி மொழியாக இருந்ததால், நிறைய பார்சி சொற்கள் வருவாய் துறையிலும், நீதி துறையிலும் இருக்கிறது என்று இந்த நூலின் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
அதேபோல் “மஜரா” என்பது அரபு சொல், அதற்கு “ஒரு நகரத்தின் துணை கிராமம்” என்று அர்த்தமாகும்.( A Village Included in Or Depend on Some Large Town) இந்த மஜரா என்ற வார்த்தை அரபி வார்த்தையாகும் இன்றுவரை ரெவன்யூவில் மற்றும் மக்கள் பேச்சி வழக்குகளில் “மஜரா” மருவி “மதுரா” என்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் “மூபலகு” என்பது “ஆக மொத்தம்” (Total Sum) என்ற அர்த்தத்தில் வரும் இந்த வார்த்தை இன்றும் கூட கொங்கு பகுதிகளில் கிரய பத்திரங்களில் பணப்பற்று சரத்து எழுதும் பொழுது பயன்படுத்தபடுகிறது.
மேற்சொன்ன மஜரா, மூபலகு வார்த்தைகள் எல்லாம் அரபி சொற்கள் என்று இந்த நூலில் பார்க்கும்பொழுது நமக்கு வியப்பை அளிக்கிறது.
அடுத்ததாக பழந்தமிழ் வார்த்தைகளில் “மாவிடை” என்ற வார்த்தைக்கு “மாடு கட்டும் இடம்” (A Place on which Cattle stands) என்று மாடுகட்டும் இடத்தை குறிக்கிறது. அதே போல் “முச்சலிக்கா” என்பது “எழுத்து பூர்வமான ஒப்பந்தத்தை” (An Agreement in writing) குறிக்கிறது. இவ்வாறு ஆச்சர்யம் நிறைந்த தமிழ் வார்த்தைகளை அவர் பல பாடுகள் பட்டு, கல்விகள் கற்று, அனுபவங்களை பெற்று இங்கே நமக்காக தொகுத்து இருக்கிறார் இந்நூலின் தொகுப்பு ஆசிரியர். அன்புத்தம்பி திரு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள்,
இதிலுள்ள வார்த்தைகள், அதன் விளக்கங்கள், அனைத்தும் இன்றைய இளம் தலைமுறை வழக்கறிஞர்கள், ஆவண எழுத்தர்கள், ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும்.
இவர் இந்நூலினை தொகுத்து வெளியிடுவதற்காக எடுத்துக் கொண்ட முயற்சி, நேரம், காலம், தியாகம், அர்ப்பணிப்பு அனைத்தும் மிகுந்த மதிப்புக்குரியது.
எனவே அனைவரும் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையின் பொக்கிஷமான இந்நூலை வாங்கி படித்து பயனடைய வேண்டும். இன்னும் பல ரியல் எஸ்டேட் துறை சார்ந்த எழுத்து படைப்புகளை எதிர்கால சந்ததிக்கு கொண்டு சேர்க்கும் வகையில் எனது அன்புத் தம்பி திரு. சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்.
நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில் அவரின் எழுத்து பணி இன்னும் சிறக்க வேண்டும் என உளமாற வாழ்த்துகின்றேன்! பாராட்டுகின்றேன்!!
இப்படிக்கு
ஆ.ஹென்றி
நிறுவனர், தேசிய தலைவர்,
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு.