மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம்!!!
கோயிலுக்கு உரிமையில்லாத தனிநபர் இனாம் நிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பிறரை துன்புறுத்தி இன்பம் காணும் அற நிலைய துறையினர்! கவனிக்குமா! தமிழக அரசு
தமிழகத்தில் பல்வேறு வகையான இனாம் நிலங்கள் இருந்து இருக்கிறது அந்த இனாம் முறைகளை எஸ்டேட் இனாம் எடுத்துவிடுதல் சட்டம் (26/1948) மற்றும் மைனர் இனாம் எடுத்து விடுதல் ரயத்துவாரியாக மாற்றுதல் சட்டம் (30/1963) ஆகிய இரு சட்டங்கள் மூலம் ஒழிக்கப்பட்டு குடியானவர்களுக்கு நில உரிமை இறக்கபட்டது!
இனாம் நில உரிமை என்பது நவாப்காலத்தில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் அதாவது கிபி 1500 களில் இருந்து அரசு அதிகாரிகள் படைவீரர்கள் என்ற நிலையில் இருந்த வேளாளர்களும், கற்றறிந்தவர்கள், மந்திரங்கள் தெரிந்தவர்கள் என்ற நிலையில் பிராமணர்களுக்கும் கொடுக்கபட்டது.
கோவில்களுக்கும் தர்ம காரியங்களுக்கும் பிராமணர்கள் விருத்திக்காகவும் சோழர் பாண்டியர் பல்லவர் சேரர் காலங்களில் இருந்தே பல்வேறு சிற்றரசர்கள் இனாம் நிலங்களை வழங்கினார்கள்
வெள்ளையர்கள் ஆட்சியில் வரி வசூலிப்பதற்கு இடையூராக இந்த இனாம் நிலங்கள் இருக்கின்றன பல்வேறு மக்கள் இது இனாம் நிலம் என்று அரசுக்கு வரி கட்டாமல் இருக்கவே வெள்ளையர்கள் இந்த இனாம்களை ஆவணப்படுத்த வேண்டும் இதனை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நினைத்தார்கள்.
இனாம் நிலத்தை வைத்து இருப்போர்களின் முற்றுரிமையை (title) ஆய்வு செய்வதும் அவைகள் உண்மையானவை எவை என்றும் தணிக்கை செய்து ஒவ்வொரு மாவட்டத்திலும் இனாம் தூய பதிவேடு (Inam fair Registrar) உருவாக்கினார்கள்! இந்த இனாம் தணிக்கையில் 1859 ஆம் ஆண்டிற்கு முன்பு 60 ஆண்டுகள் வரை இனாம் யாரெல்லம் அனுபவித்து வருகிறார்களோ அவர்களுக்கும் அல்லது முன்பிருந்த அரசர்கள் இனாம் கொடுத்த ஆவணத்தை சமர்பிக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இனாம் உரிமையை உறுதிபடுத்தி இனாம் தூய பதிவேட்டில் கணக்கில் ஏற்றி வைத்தார்கள் .இந்த பதிவேடுதான் 170 வருடங்களாக ஒரு நிலையான அழிக்க முடியாத சான்றாவணமாக இருக்கிறது. இந்த இனாம் பதிவேட்டில் இரண்டு வகையான இனாம்களை பதிவேற்றபட்டு இருக்கிறது! ஒன்று சமய சார்பற்றது இன்னொன்று சமய சார்புடையது ஆகும்.
இதில் பிராமணர்களின் தனிபட்ட நலன்களுக்கு கொடுக்கபட்டது அவை குடியிருப்புக்காக வரியில்லாமல் அனுபவிக்க அகரஹாரம், வேதங்களை மக்களுக்கு விளக்குவதற்காக பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட இனாம் வேதவிருத்தி, பிராமணர்களின் ஆசார ஆதாயத்திற்காக கொடுக்கபட்டது பட்டவிருத்தி இனாம், பஞ்சாங்க விதிகளை சொல்பவர்களுக்கு பஞ்சாங்க இனாம், மகாபாரதத்தை கோயிலில் பிரசாரம் செய்வதற்கு பரத்தி இனாம், புராணங்கள் பிரச்சாரத்துக்கு புராணங்கள் இனாம் என்று வழங்கபட்டது ! பிரம்மதேயம் இனாம், ஸ்தோத்திரியம், தர்மசாசனம், பொறுப்பு இனாம் மற்றும் இன்னும் பலவகையான இனாம்கள் பிராமணர்கள் தனிபட்ட நலனுக்காக அக்காலத்தில் வழங்கபட்டது அதேபோல் அமரம் , பிசோயி, உம்பிளிக்கை, தோரதானம், முகாசம், காசவர்க்கம், கட்டுபடி, ஜீவிதம், ஜாகீர், இனாம் அல்தமகா, போன்ற இனாம்கள் படைபணி காவல் பணிக்காக வழங்க வேளாளர்களுக்கும் தெலுங்கு நாயக்கர்களுக்கும் மறவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வழங்கபட்டது அதேபோல வுருவாய் துறையில் பலருக்கு கிராம ஊழிய இனாம் கொடுக்கபட்டது அவை கர்ணம் மானியம், தலையாரி மானியம், வெட்டியான் மானியம், நீர்கட்டி மானியம், குளம்காவல், பட்டி, ஊரணி, வாய்க்கால் காவல் மானியம் என்று இருந்தது! இப்படி பல இனாம்கள் தனி நபருக்கு வழங்கபட்டது இதுபோல் இன்னும் பல இனாம்கள் வெவ்வேறு மாவட்டங்களில் பல பெயர்களில் தனிநபர் இனாம்கள் இருக்கிறது!
மேலும் இனாம் என்பது அரசுக்கு கட்ட வேண்டிய நிலவரி கட்ட வேண்டியது இல்லை முற்றிலும் இலவசம் ஆகும்! இப்படி முற்றிலும் இலவசம் எல்லா இனாம்களிலும் கிடையாது அது பல்வேறு முறைகளில் நடைமுறைபடுத்தப்பட்டு இருந்தது! அதாவது அர்த்தமானியம் என்று ஒரு இனாம் இருந்தது அப்படி என்றால் பாதி நில வரி் இலவசம் மீதி அரசுக்கு கட்ட வேண்டும்! சதுர்பாகம் அல்லது பதிகாபடி இனாம் அதற்கு நான்கில் ஒரு பங்கு அரசுக்கு வரி கட்ட வேண்டும் மீதி மூன்று பங்கு கட்ட தேவையில்லை! அதேபோல் முப்பாலிகா படி இனாம் அப்படி என்றால் மூன்று பங்கை அரசிடம் கட்ட வேண்டும்! ஒரு பங்கு இனாம்தாரர் அனுபவிக்க வேண்டும், அடுத்து திரிபாகம் இனாம் அதற்கு மூன்றில் ஒன்று அரசிற்கு வரியாக கொடுக்க வேண்டும் இரண்டு பாகம் இனாமதாரருக்கு, அதேபோல் ரயாயத்முகாசா் இனாம் என்றால் ஆண்டுதோறும் விளைச்சலுக்கு ஏற்றபடி வரி மாறும், பிலிமுக்கா இனாம் என்பது நிரந்தரமாக இவ்வளவு வரி என்று விதிக்கபட்டது ஆகும்! இருவமானியம் என்பது விகிதாசாரபடி அரசும் இனாம்தாரரும் பிரித்து கொள்வது ஆகும் இப்படி நிலவரியை அரசு முற்றுலும், பாதி, கால்வாசி , விகிதாசாரபடி பல்வேறு முறைகளில் இனாம்கள் அளித்து இருக்கிறது! எனவே இனாம் என்றால் வரி இலவசம் அந்த வரி முழுவதுமாக அல்லது பல்வேறு அளவுகளில் இலவசமாக அரசால் கொடுக்கபட்டது.
மேற்படி இனாம் நிலஙகளுக்கும் கோவிலுக்கும் இப்போதைய இந்து அறநிலையதுறை நயினருக்கும் எந்தவிதமான ஒட்டோ உறவோ இல்லை! ஆனால் இபபொழுது யுடிஆர் பட்டா படி கிரயம் வாங்கி அனுபவித்து கொண்டு வரும் சம்சாரியின் வீட்டுக்கு இந்த இனாம் எல்லாம் சமயசார்புள்ள நிலம் போலவும் அறநிலையதுறைக்கு சொந்தம் போலவும் கற்றறிந்த அறநிலையதுறை அதிகாரிகள் அப்பாவி மக்களுக்கு நோட்டீஸ் அனுப்பகிறார்கள்!
மேலும் பத்திர பதிவை நிறுத்தி மின் இணைப்பை நிறுத்தி வருவாய் பதிவுகளை நிறுத்தி அறநிலைதுறையிடம் இருந்து தடையின்மை சான்று வாங்கி வர சொல்லி சம்சாரிகளை அலைய விட்டு அதில் இலாபம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இந்து அறநிலையதுறையினர்!
ஏன் இப்படி சம்சாரிகள் வாழ்க்கையில் பொருளாதார தடை போடுகிறீர்கள் என்று கேட்டால் இனாம் என்றாலே அறநிலையதுறையின் கட்டு பாட்டில் வர கூடியது தான் என்று வியாக்கியானம் வேறு! சேலம் டவுனில் தோட்டி மானியம் என்று தெளிவாக பழைய கணக்குகளில் இருக்கிறது அந்த தோட்டி அனுபவித்த இனாமும் அறநிலையதுறையினர் உடையது என்று இப்பொழுது அறநிலைய துறை நோட்டிஸ் அனுப்பி இருக்கிறது! தமிழகம் முழுக்க இப்படி பல்வேறு தனிநபர் இனாம் நிலங்களை தாய் ஆவணங்களாக கொண்டவர்களின் சொத்துக்களை எல்லாம் தனது என்று இந்து அறநிலையதுறை தன் ஆக்டோபஸ் கரங்ககளால் பிடிக்கிறது!
இனாம் நிலம் என்றால் என்னவென்றே தெரியாத அப்பாவி மக்கள் அறநிலையதுறையினரின் நோட்டீசால் பயந்து கோயில் சொத்தா என்று அதிர்ந்து அறநிலையதுறை அதிகாரிகளை பார்த்து பயந்து நிம்மதியாக தூங்குவதில்லை! மக்களின் புண்களில் உப்பை தடவினால் நன்றாக எரியும் அப்பொழுது அதனை சரிசெய்ய எவ்வளவு பணம் வேண்டுமானலும் தருவார்கள்! அதேபோல் இனாம் தெரியாமல் நோட்டீஸ் வந்துவிட்டால் அய்யர் கோயில் நிலமா கோயில் என்றால் எதுவும் செய்ய முடியாது என்று பயமுறுத்தி வழிபறி செய்துகொண்டு இருக்கிறார்கள்! தெருவில் இரத்தம் ஓடும் போது அதில் அதிகம் சம்பாதியுங்கள் என்று ரூத்சைல்டு் வங்கியின் நடத்திய பாரோன் ரூத்சைல்டு என்ற அரை சைக்கோபாத் சொன்னார் அதுபோல நிகழ்வுகளை இந்து அறிநிலையதுறையினர் அடிதட்டு நடுத்தர மக்கள் தங்கள் வீட்டு மனைதேவைக்காக வாங்கிய மனையை வாங்கிய வீட்டை அது தனிநபர் இனாம் என்று சமய சார்பற்றது என்று இருந்தாலும் அதற்கு நோட்டீஸ் விடும் பழக்கத்தை கடைபிடித்து கொண்டு இருக்கின்றனர்.
மதிப்பிற்குரிய முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே ! பாசத்திற்குரிய சேகர் பாபு அண்ணன் அவர்களே அறுவது கோயில் நிலங்களை சமயசார்புள்ள இனாம் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் ஆனால் சமயசாற்பற்றவை தனிநபர் இனாம் நிலத்திற்கு எல்லாம் நோட்டீஸ் அனுப்புவதை தடுத்து நிறுத்தும்படி கோரிக்கை விடுக்கிறோம்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
நூலாசிரியர்-நிலம் உங்கள் எதிர்காலம்
9841665836
www.paranjothipandian.com
#letter #Hon’ble #Tamilnadu #Chief_Minister #CM #Inam_Fair_Registrar #Inam _land #Brahmins #Panchanga #Mahabharata #temple #Brahmadeyam_inam #stothriyam #dharmasasana #Amaram #Bisoi #Umplikai #Thoradanam #Mukasam #Kasavarkam #Katupadi #Jeevidam #Jagir #Inam #Altamaka #soldiers #Telugu_Nayak #Muslims